RSS

24/06/2014

கேள்வி பிறந்தது அங்கே!!!!!


 பதிவு ஒன்று போட்டாலும் போட்டார் சகோ.மதுரை தமிழன். அப்பப்பா அப்படியே சாட்டிலைட் வலம் வந்த மாதிரி வலம் வருகிறது.
என்னையும் இத்தொடருக்கு அழைத்திருக்கிறார்கள். அழைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.
படிக்கும்போதும் வகுப்பில் கேள்விக்கு விடை தெரிந்தாலும் கை உயர்த்தமாட்டேன்.கடைசியாகதான் எல்லாமே.அதுபோல்தான் இக்கேள்விக்கு பதிலும் வருகிறது போலும். ஒருவரைபோல 7பேர் என்பார்கள். ஒத்த எண்ணங்கள் இருப்போரும் உண்டு.

1.உங்கள் 100 வது  பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
இன்று வரை பிறந்த நாளில் என்ன செய்கிறேனோ, அதையே
அப்போதும் செய்வேன். எங்களுக்கு பிறந்ததிகதியில் ஒன்றுமில்லை.பிறந்த நட்சத்திரம் அன்றுதான் புதுச்சட்டை அணிந்து கோவில் போய் வந்து, பாடசாலை நாள் எனில் பாடசாலைக்கு மிட்டாய், இனிப்புகள் கொண்டு போய் கொடுப்பது.வார இறுதி என்றால் வழமைபோல கோவில்,வீடு, வாழ்த்துக்கள். எல்லாமே 10,12 வயதுடன் சரி.பின்னர் பிரச்சனையில் பிறந்தநாளிலும் ஓடிஒளிந்து உயிரைக்காப்பதே பெரும்பாடு.இங்கு வந்தபின்னும் சாதாரணமான நாளாகவே இருக்கும். வீட்டில் இருப்பவர்களின் சந்தோஷத்திற்காக ஏதாவது ஸ்நாக்ஸ் செய்வேன். நண்பர்கள் யாராவது வருகிறோம் எனச்சொன்னால் நல்லுணவு சமைத்து பரிமாறுவேன். இதுபோல்தான் 100வது பிறந்த தினமும் இருக்கும்.
   
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புறீர்கள்?
மனித மனங்களை கற்றுக்கொள்ள.

3. கடைசியாக சிரித்தது எப்போ? எதற்காக?
 நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு இவர்களின் மொத்த
உருவமாக பக்கத்தில் ஒருவர் இருக்கும்போது சிரிப்புக்கு
பஞ்சமில்லை.இப்போ இதை பப்ளிஷ் செய்யமுன் ஒரு
மாதாந்த பத்திரிகையில் படித்து சிரித்தேன்,சிந்தித்தேன்.
இந்த குட்டீஸ் என்னமா யோசிக்கிறாங்க. அந்த ஜோக்...
குட்டீஸ்:- தோசைக்கும்,இட்லிக்கும் என்ன வித்தியாசம்.
பெண்மணி:- இரண்டும் மாவில் தானே செய்யிறோம்.
அதற்கு அந்த குட்டீஸின் பதில்:- 
இல்லை இட்லி கூட்டமா வரும். தோசை சிங்கிளா வரும்.
அதில் வந்த குறும்புகள் அத்தனையுமே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
24 மணி நேரம் நடக்க சான்ஸே இல்லை. ஆனால் எங்களுக்கு
இங்கு அப்படி ஒரு சூழ்நிலை 2008ல் இயற்கையின் சீற்றத்தால்
ஏற்பட்டது. இவ்வீட்டிற்கு குடிவந்த புதிதில். அதுவும் குளிர்காலமான தைமாதத்தில்.ஆனால் அரை மணிநேரம்தான். பின்னர் வந்து விட்டது.
அப்படி ஏற்பட்டால்!!!!
படித்து முடிக்காமல் இருக்கும் பத்திரிகை,புத்தங்கள் வாசிப்பது.
காலார நடந்து மலைராணியின் இயற்கையை ரசிப்பது. கணவர்,
மகனுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது.

5.உங்களுடைய குழந்தையின் திருமணநாள் அன்று 
அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
இந்த காலத்து, இங்கு வளரும் பிள்ளைங்க நல்ல பார்வோர்ட்.இரு சூழலிலும் வளருகின்றார்கள். எதையும் முன்னின்று நடத்தவும்,சமாளிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். அஸ்திவாரம் நல்லதாக போட்டால் கட்டிடம் உறுதியாக இருக்கும். என் மகனிடம் நல்லபிள்ளையாக எப்போதும்
இருக்கவேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்துகிறேன்.
அவர் என்னிடம் பேசும் விடயங்களை வைத்து நானே
ஆச்சரியப்படுகிறேன்.சின்ன வயதில் இவ்வளவு பக்குவமா என. சூழல்கள் பக்குவப்படுத்தவும் செய்கிறது, பாதை தவறவும் செய்கிறது. அமைவது அவரவர் அதிர்ஷ்டம்.

6.உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க 
முடியுமென்றால் எந்த பிரச்சனையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள்.?
பிரச்சனை என்பதே பிரச்சனையாக இருக்கு!!!!!. ஒவ்வொருத்
தருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கு. அவரவர்
பிரச்சனை தீர்ந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை.
அடிப்படையான பிரச்சனை பசி. எல்லாருக்கும் வயிறாற
நல்ல உணவு கிடைத்தால்....

7.உங்களுக்கு ஒரு பிரச்சனை அதை தீர்க்க யாரிடம் அட்வைஸ் 
கேட்க விரும்புவீர்கள்.?
 நானே தீர்ப்பேன். சுயபுத்தி விஷேசம் என அப்பா அடிக்கடி சொல்வார்.
  
8.உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார்.  
அதைக் கேள்விப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
 தவறான செய்திதானே.அதை பெரிதுபடுத்தமாட்டேன். இதுவும் கடந்து  போகும்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்துவிட்டால்,அவரிடம் என்ன சொல்வீர்கள்?
ஆறுதல் வார்த்தைகளால் இழப்பை ஈடுசெய்யமுடியாது.
காலம்தான் அவரின் காயங்களுக்கு மருந்தாக முடியும்.  

10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீங்க.?
சாதாரண நடைமுறையே இதுதான். ஏதாவது உடற்பயிற்சி
செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லாதவள்.
 நண்பி அனாவுடன்anna சேர்ந்து ஒரு மெதுஓட்டம், ஊரில் இருக்கும் என் சகோதரிகளுடன் தொலைபேசுதல். தோட்டத்தில் எல்லாரையும்(வேறு யாருங்க செடி,கொடிதான்) நலம் விசாரித்து, உணவு, தண்ணீர் பறவைகளுக்கும், செடி கொடிகளுக்கு அளித்து, நெட்டில் கருத்துப் பகிர்வு, வீட்டு வேலைகள், கைவேலைகள் மீதம் இருந்தால் அதனை முடித்து, ஒரு sudoku செய்து முடித்து,இன்றைய நாட்டு நடப்புகளை,வானிலை அறிக்கையை தொலைக்காட்சியில் பார்த்து, பயிற்சியாக  கீதம்....சங்கீ...தம் !!!!!!!
          ********************************************
சகோ.மதுரைத்தமிழனுக்கு நன்றிகள். நல்ல கனவு.
அதிகாலையில் கண்டீர்களோ என்னவோ.நன்றாக
பலித்துவிட்டது. ரெம்ப நன்றிகள்.
                                 ********************
 "யாரப்பா பலமா குறட்டை விட்டு தூங்கிறது!!!. 
ஆவ்வ்வ் கனவுமட்டும் இப்போதைக்கு காணாதீங்க. ப்ளீஸ்ஸ்ஸ். இங்கெல்லாம் இனி சம்மர் ஹொலிடே  ஆரம்பமாக போகுதூஊஊ"""
                     ________()________()_________()__________
    
      
  
    
    
  


04/06/2014

கீ...தம் சங்கீ..தம்

கூட்டிசைப்பாடல்  choral music
தோட்டபதிவு போட்டதும் அடுத்த பதிவை போட நினைத்திருந்தேன். 
ம்.ம் நினைப்பதெல்லாம் நடக்குதோ!!!! 
சின்ன வயதில் அம்மாவின் விருப்பத்திற்காக சங்கீதம் படித்தேன்.  தரம் 4 வரை படித்து பாஸாகியாச்சு. பின் பிரச்சனைகளால் அது இல்லாமல் போய்விட்டது.நீண்டகாலமா சும்மா படித்ததை முணுமுணுப்பது, சினிமா பாடல் பாடுவது எல்லாம் என் சமையலறையில் மட்டுமே. இப்படியே  நல்லாதான்  போய்கிட்டிருந்தது கடந்த வருடம் ஐப்பசி மாதம் வரை.
ஒருநாள் பக்கத்து வீட்டு டீச்சர் (இங்குள்ள)  "ஏன் நீ மியூசிக் க்ளாஸூக்கு வரக்கூடாது." என கேட்டா. ஆ..ஹா இது என்ன புதுசாஆ ஒரு ஆரம்பம் என நான் குழம்பித்தவித்தேன். தவிப்பெல்லாம் இந்த சங்கீதம் எப்படி இருக்கும், இனிமேல் படித்து டெஸ்ட் எல்லாம் எழுத முடியாது என்பதுதான். அத்துடன் இது எனக்கு புதிது. கேள்விப்படாதது.
என்னவாக இருக்கும் என்பதை பார்க்கவே, விருப்பமில்லாமல் சேர்ந்து கொண்டேன். கொஞ்சநாள் கஷ்டப்பட்டேன். பாடல்கள் பாட, பின் அதுவே விருப்பமாகிவிட்டது. லத்தீன், பிரெஞ்ச், ஆங்கிலம், ஜேர்மன் பாடல்கள் பயிற்சியளிக்கப்படுகிறது. பாட்டுப்பயில  வயதானவர்கள், பாடசாலை+பல்கலைகழக மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், குடும்பபெண்மணிகள்  வருகிறார்கள். ஒவ்வொரு இடங்களிலும் அடிக்கடி  CONCERT  நடைபெறும். 

இப்படி படிப்பதற்கு ஒரு அங்கீகாரம் தேவை என்பதாலும், திறமையான குழுக்களை தெரிவு செய்வதற்காகவும் 5 வருடத்திற்கு ஒரு முறை மாநில அளவில் போட்டிகள் நடைபெறும். அப்படியான போட்டி ஒன்று இந்த வருடம் வந்தது. எங்கள் குழுவும் கலந்துகொள்வற்காக தெரிவு செய்யப்பட்டு, அப்போட்டிக்காக பகல்,இரவு நேரங்களில் வகுப்பு நடாத்தப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டது.
இப்போட்டி கடந்த சனி, ஞாயிறு இருதினங்களாக  நடைபெற்றது. எங்கள் குழு சனியன்று 31.5.14 போட்டியிட தேர்வானது. மொத்தம் 20 குழுக்கள் போட்டியிட்டன.
                                 எங்கள் குழுவினர்
                                    ஒத்திகை பார்த்தல்
                 அரங்கத்தினுள் செல்லக்காத்திருக்கும் மக்கள்.
                                    அரங்கினுள் மக்கள்.
                                    பாடுகின்றோம்
வலமிருந்து 2வது நிற்பவர்தான் என்னை குழுவில் இணைத்த ஆசிரியை. இது எங்கள் குழுவின் சீருடை.(கருப்பு & ஊதாகலர்)
                 அனே(Anne) நன்றாக பாடும் திறமையுள்ளவர்
சான்றிதழுடன் Chairman & Music Director.வெற்றி பெற்ற மற்றைய குழுவினர்களும்.
போட்டியில் எங்கள் குழுவிற்கு 3ம் இடம் கிடைத்துள்ளது.  சான்றிதழ் வழங்கப்பட்டது. 20 குழுக்கள் பங்குபற்றின.
நாங்க இரவு 10 மணியளவில் எங்க இடத்திற்கு  வந்தபோது ஊர்மக்களால்   வரவேற்பு அளிக்கப்பட்டது.
                             *********************
இந்த பாராட்டுக்கள் எல்லாம் எங்கள் Music Director 
Michael Rinscheid  மிசைல் ரின்சைட் அவர்களுக்குதான் சேரும்.
                  _()_  _()_  _()_  _()_ _()_  _()_  _()_  _()_  _()_
இந்த பரபரப்பிலும் அனே கேட்டதற்காக செய்த கார்ட். அவரும் 
க்ராப்ட்நன்றாக செய்வார். க்விலிங் செய்ய ஆரம்பித்திருக்கிறார். 
                   இப்படியே கொடுத்தேன்.மிகுதி அவர் அழகு செய்திருந்தார்.
                            - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 


 
Copyright பிரியசகி